Monday, October 8, 2012

தவறாக சுழலும் சாட்டை...


"சாட்டை பாத்துட்டீங்களா.... டீச்சர்‌ஸ் எல்லாத்தையும் கிழிச்சுருக்காங்க சார்...” என்ற நண்பரின் பரிந்துரையை தொடர்ந்து நேற்று படம் பார்த்தேன். கதை ஒரு modified ஹீரோயிச கதை. “மிகவும் நல்ல” ஆசிரியரான கதாநாயகன் வேலைக்கு சேரும் அரசுப்பள்ளியை சில பல வித்தைகள் கற்று கொடுத்து முதல் இடம் கொண்டு வருவதுதான் கதை. கதை அத்துடன் நின்றிருந்தால் ஒரு “Feel Good” படம் என்று கொண்டு ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் கதாநாயகனை உயர்த்திக் காட்ட இயக்குனர் மற்ற அரசு ஆசிரியர்களை சித்தரிக்கும் பாங்கே நெருடுகிறது.

சாட்டை காட்டும் உலகம் ஒரு உதாரண உலகம். அதில் அனைவரும் ஏதோ ஒரு வகையில் நல்லவர்கள் – ஆசிரியர்களை தவிர. அங்கே “எப்படியாவது இந்த வருடம் ஸ்கூலில் பசங்களை சேர்த்து விடுங்கள்” என்று கட்டளையிட்டு ஊர் முழுக்க ஓட விடும் அதிகாரிகள் இல்லை... இலவசம் என்ற பேரில் அரசு கொடுக்கும் எந்த பொருளையும் தன் சொந்த செலவில் போய் வாங்கி, அதை திருடு போகாமல் பார்த்து அதில் ஒன்று குறைந்தாலும் அசிங்கமாய் திட்டு வாங்க வேண்டிய அவசியம் எந்த ஆசிரியருக்கும் இல்லை... மாணவர்களுக்கு காலணி வழங்கினால் கூட அதற்கு அளவுப்பார்க்க Training கொடுத்து ஆசிரியர்களை வேலை வாங்கும் அரசாங்கம் அதில் இல்லை... எல்லாவற்றுக்கும் மேலாக படத்தில் அனைத்து ஆசிரியர்களும் பாடம் நடத்துகிறார்கள்!!!!... அரசாங்கப் பள்ளிகளில் அதற்கு எத்தனை இடையூறு வருமென்று தெரிந்த ஆசிரியர்கள் இருந்தால் கேட்டுப் பாருங்கள்....

இது போன்று ஒரு முகமாய் ஒரு பிரச்சனையை சித்தரிப்பதின் விளைவு என்னவென்றால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றாலே இப்படித்தான் என்று ஒரு பிம்பத்தை இதுப்போன்ற படங்கள் மக்களிடையே உருவாக்கி விடுவதே. அதன் விளைவு அடுத்த முறை ஒரு பிரச்சனை என்றாலே எந்த தரப்பில் தவறென்று யோசிக்காமல் இவங்க இப்படித்தான் என்று ஒரு தீர்ப்பை வழங்க வைத்து விடுகிறது. சமீபத்தில் ஒரு ஆசிரியையை மாணவன் ஒருவன் குத்திக் கொன்று விட்டான் என்றதும் உடனே Facebook, டிவி என்று எல்லாவற்றிலும் கமெண்ட் குவிந்தது. அவற்றில் முக்கால்வாசி அந்த ஆசிரியை தவறு செய்திருப்பார் என்றே இருந்தன. இறந்தும் கொல்லப்பட்டார் அந்த ஆசிரியை. காரணம் – ஆசிரியர்கள் மட்டுமே தவறு செய்பவர்கள் என்று உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம். யதார்த்த வாழ்க்கை மிகவும் சிக்கலானது. இங்கே ஹீரோவும் கிடையாது வில்லன்களும் கிடையாது.எந்த ஒரு படமும் இதை முழுமையாக பிரதிப்பலிப்பது கடினம். ஆனால் இது போன்ற படம் எடுக்கும் முன் உண்மையிலேயே அந்த இயக்குனர் சமூகத்துக்கு கருத்து சொல்ல விரும்பிருந்தால் ஆசிரியர்கள் தரப்பையும் அவர்களின் பிரச்சனையை பிரதிபலிக்கும் விதமாக ஒரே ஒரு கதாப்பாத்திரம் வைத்திருந்தால் கூட கண்டிப்பாக பாராட்டியிருக்கலாம். அது போல் இல்லாமல் ஒரு கதாநாயகனை உயர்த்தி காட்ட மற்ற ஆசிரியர்கள் அனைவரும் மோசம் என்று காட்டியிருப்பது இயக்குனரின் குறுகியப் பார்வையையே காட்டுகிறது. இதற்கு 100 பேரை சுற்றி சுற்றி அடிக்கும் படம் எடுக்கும் இயக்குனர்கள் எவ்வளவோ பரவாயில்லை.

இந்த படத்தின் மற்றுமொரு கருத்து – எவ்வளவு மோசமான மாணவனாக இருந்தாலும் அவனை அன்பினால் ஒரு ஆசிரியர் சீர்த்திருத்த முடியும் என்பது. மிகவும் நல்ல உண்மையான கருத்து. இதை அனுபவப்பூர்வமாக நான் கண்டுள்ளேன். நான் 7வது படிக்கும் போது எங்கள் வகுப்பில் ஒருத்தி இருந்தாள். எப்போதும் கடைசி மதிப்பெண் எடுப்பாள். ஒரு முறை எங்கள் வரலாறு ஆசிரியர் அவளை நடு வகுப்பில் நிறுத்தி திட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த எங்கள் வகுப்பாசிரியை வெளியே நின்று அதை கவனித்துக்கொண்டே இருந்தார். அடுத்தது அவரின் வகுப்பு. ஆனால் அன்று அவர் எதையுமே சொல்லித்தரவில்லை. வகுப்பு முடிந்து செல்லும் போது அவருடன் அந்த பெண்ணையும் அழைத்துச்சென்றார். அன்று பள்ளி முடிந்து செல்லும்போது அவளைப் பார்த்தேன். தனியே யோசனையாய் உட்கார்ந்திருந்தாள். சற்றே பரிதாபப்பட்டுவிட்டு சென்று விட்டேன். அதன் பின் அந்த பெண் வகுப்பில் தனியாகவே இருப்பாள். பேசவேயில்லை. ஒன்றில்லை இரண்டில்லை – 3 மாதங்கள். அடுத்த பரிட்சை முடிந்து ரேங்க் கார்ட் கொடுக்கும் வரை.... அவள் 4வது ரேங்க் வாங்கியிருந்தாள். அந்த கார்டை வாங்காமல் எங்கள் வகுப்பாசிரியையை கட்டிக்கொண்டு அழுத போது நாங்கள் எடுத்த மூன்று ரேங்க்களை விட அவளின் 4வது ரேங்கே உயர்ந்ததாய் தெரிந்தது. இந்த படத்தின் ஆசிரியர் திக்குவாய் பெண்ணை திருத்தும்போது எனக்கு அந்த பெண்தான் நினைவுக்கு வந்தாள். இன்று அந்த பெண்ணும் அந்த ஆசிரியையும் காலப்போக்கில் மறைந்து விட்டனர். ஆனால் அவரின் அந்த செய்கை உண்டாகிய பாதிப்பு இன்றும் மறையவில்லை.

மொத்தத்தில் சாட்டை படமென்று மட்டுமே கொண்டால் மிகவும் அருமை. ஆனால் சிலர் கூறுவது போல் படமல்ல பாடமென்று சொன்னால் மிகத் தவறான ஒருதலைப் பாடம்.

1 comment:

  1. நான் 7வது படிக்கும் போது எங்கள் வகுப்பில் ஒருத்தி இருந்தாள். எப்போதும் கடைசி மதிப்பெண் எடுப்பாள். ஒரு முறை எங்கள் வரலாறு ஆசிரியர் அவளை நடு வகுப்பில் நிறுத்தி திட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த எங்கள் வகுப்பாசிரியை வெளியே நின்று அதை கவனித்துக்கொண்டே இருந்தார். அடுத்தது அவரின் வகுப்பு. ஆனால் அன்று அவர் எதையுமே சொல்லித்தரவில்லை. வகுப்பு முடிந்து செல்லும் போது அவருடன் அந்த பெண்ணையும் அழைத்துச்சென்றார். அன்று பள்ளி முடிந்து செல்லும்போது அவளைப் பார்த்தேன். தனியே யோசனையாய் உட்கார்ந்திருந்தாள். சற்றே பரிதாபப்பட்டுவிட்டு சென்று விட்டேன். அதன் பின் அந்த பெண் வகுப்பில் தனியாகவே இருப்பாள். பேசவேயில்லை. ஒன்றில்லை இரண்டில்லை – 3 மாதங்கள். அடுத்த பரிட்சை முடிந்து ரேங்க் கார்ட் கொடுக்கும் வரை.... அவள் 4வது ரேங்க் வாங்கியிருந்தாள். அந்த கார்டை வாங்காமல் எங்கள் வகுப்பாசிரியையை கட்டிக்கொண்டு அழுத போது நாங்கள் எடுத்த மூன்று ரேங்க்களை விட அவளின் 4வது ரேங்கே உயர்ந்ததாய் தெரிந்தது. இந்த படத்தின் ஆசிரியர் திக்குவாய் பெண்ணை திருத்தும்போது எனக்கு அந்த பெண்தான் நினைவுக்கு வந்தாள். இன்று அந்த பெண்ணும் அந்த ஆசிரியையும் காலப்போக்கில் மறைந்து விட்டனர். ஆனால் அவரின் அந்த செய்கை உண்டாகிய பாதிப்பு இன்றும் மறையவில்லை.---------- super sir

    ReplyDelete

உங்கள் சிந்தனைகளையும் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...