Saturday, October 27, 2012

சின்மயி.... சில சிந்தனைகள்...

கடந்த வாரம் சின்மயி போலீஸிடம் ஒரு புகார் அளித்திருக்கிறார் என்ற செய்தி வந்தப்போது பத்தோடு பதினொன்றாக இதை மற்றுமொரு பிரபல்யர்களின் புகார் என்று அதிகம் கவனிக்கவில்லை. ஆனால் அதன் பின் தீடீரென்று ஒரு கார்டூனிஸ்ட் அதில் இடஒதுக்கீட்டையும் மீனவர்ப்பிரச்சனையும் பற்றி தவறாக பேசிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பின் சட்டென்று பெய்யும் சப்தமான மழையைப் போல் பல நிகழ்வுகள். சரி தவறென்ற விவாதங்கள். ஒரு கட்டத்தில் உண்மைக்கும் கற்பனைகளுக்கும் உள்ள பிரிக்கும் கோடு மங்கி அழியத்துவங்கி விட்டது. எதையும் ஆராயாமல் பேசக்கூடாதென்று அந்த நிகழ்வை பற்றி விவரங்கள் திரட்டினேன். என் கருத்தை உருவாக்கிக்கொள்ள உதவிய பதிவுகள்.

http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html
http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html
http://www.twitlonger.com/show/fumfoi
http://www.chinmayisripada.com/2012/10/facing-abuse-and-backlash-of-rumours.html
http://www.rajanleaks.com/2012/03/blog-post.html
http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html

எல்லாவற்றையும் படித்துப்பார்த்தால் ஒரு வித அசூயையும் அயர்ச்சியுமே மிஞ்சி நிற்கின்றது. என்ன காரணம் சொன்னாலும் , படித்தவர்கள் பேசும் பேச்சா இது? என்ற கேள்விக்கு பதிலில்லை. இணையம் என்பது பொதுவெளி. அவற்றில் இருப்பவை அனைவரின் பார்வைக்கு என்றானப்பின் வைக்கப்படும் கருத்துகளில் ஆபாசம் தவிர்ப்பது கடமை. கடமையை மீறும் போது வரும் பின் விளைவுகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

ஆனால் இந்த விஷயத்தில் பலரும் சின்மயி மீது வைக்கும் குற்றச்சாட்டு அவர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசினார் என்பதே. அது ஒன்றே அவரை ஆதரிப்பதை தடுக்கிறது என்று பலர் கூறியுள்ளனர். ஆனால் அவர் கூறியதை விடவும் பல மடங்கு அதி தீவிரமாய் அதை பற்றி பலர் பல சமயங்களில் பேசி உள்ளனர். எந்த ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து உண்டு. அதை வெளிப்படுத்துவது அவரவர் உரிமை. ஆனால் அந்த கருத்தை நீ தெரிவித்து விட்டாய்... எப்படி தெரிவிக்கலாம் என்று பாய்வது கருத்து தீவிரவாதம். இதில் அவரின் கருத்தை விட பலருக்கு பிரச்சனையாக இருப்பது அவரின் ஜாதிதான். சுஜாதா ஒரு முறை சொன்னதுதான் ஞாபகம் வருகிறது - இங்கே சிலருக்குத்தான் சில கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது.

அடுத்து அவர் சிபாரிசு பிடித்து கைது செய்ய சொன்னார், தன் பிரபலத்தை அதற்கு பயன்படுத்திக்கொண்டார் என்கிறார்கள். அவர் பிரபலமாக இருப்பதால்தானே அவர் குறி வைக்கப்பட்டார். அதிலிருந்து தப்பிப்பதற்கு தன் பிரபலத்தை பயன்படுத்திக்கொண்டார். இதை சரியென்று சொல்லவில்லை. ஆனால் அந்த ஒன்றே எதிர்த்தரப்பினரின் செயலை நியாயப்படுத்துமா?

தமிழ் இணையத்தில் எங்கும் வசவுகளே அதிகம் உள்ளன. கம்யூனிஸ்ட்டுகள் பெரியார்வாதிகளை திட்டுகிறார்கள். பெரியார்வாதிகள் தலித் தலைவர்களை திட்டுகிறார்கள். ஆத்திகர்கள் நாத்திகர்களை திட்டுகிறார்கள். நாத்திகர்கள் ஆத்திகர்களை திட்டுகிறார்கள். எல்லாரும் காந்தியை தவறாமல் திட்டுகிறார்கள். இங்கே பொதுவானவர்கள் படிப்பதற்கு சமையல்கலை தளங்களும் திரை விமர்சனங்களும் மட்டுமே மிஞ்சி உள்ளன.

சின்மயி விஷயத்தில் மிகவும் பயம் தருவது அவரை எதிர்த்தவர்கள் உண்மையிலே யார் என்பதுதான். இவர்கள் சாமானியர்கள். எந்த ஒரு இயக்கத்துடனோ தொடர்பில்லாதவர்கள். பெரிய கொள்கைவாதிகளோ புரட்சியாளர்களோ இல்லை. ஆனால் அவர்களின் வார்த்தையில் தெரியும் வன்மம் - ஒரு கணம் அதிரவைக்கின்றது. எந்தளவுக்கு இவர்களுக்கு வெறியூட்டப்பட்டிருந்தால் இவர்கள் இப்படி பேசுவார்கள். இவர்கள்தான் சமுதாயம் என்றால் எதிர்காலத்தை நினைத்தால் பயம்தான் மனதை கவ்வுகிறது.

ஒன்று மட்டும் புரிகிறது ... இங்கு இன்றும் ஜாதி உயிருடன் நலமுடன் உள்ளது. என்ன காலத்துக்கேற்ப அப்டேட் செய்துகொண்டு பேன்ட் சட்டையில் நடமாடுகிறது. இணையம் உலகத்தையே திறந்திருக்கலாம். ஆனால் மனித மனங்களை திறக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தையா நம் குழந்தைகளுக்கு நாம் தருகின்றோம் என்று நினைக்கும் போது மனதில் வெறும் அவநம்பிக்கையே மிஞ்சுகிறது.

10 comments:

  1. தங்களின் அருமையான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் பகிருங்கள் (http://www.tamiln.org/)
    தமிழனின் நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. செய்துவிட்டேன்... நன்றி..

      Delete
  2. romba azhaga enna veri edhanaal verinnu theliva ezhuthirukkeenga ..ivargal sila vanma pechaalargalaar moolai salavai seiyappattirukkiraargal.

    ReplyDelete
  3. "No one can make you feel inferior without your own consent" இது சின்மயி யின் வாதம்.இப்பொழுது தாழ்த்தப்பட்டவர்கள் , பிற்ப்படுத்தப்பட்டவர்கள் என்று சமுதாயத்தில் பிரித்து வைத்திருப்பவர்களின் முன்னோர்களே இதற்க்கு காரணம். அவர்கள் இடம் கொடுக்காமல் அவர்களை ஒருபோதும் அந்த நிலைமைக்கு கொண்டு போயிருக்க முடியாது. உதாரணமாக அந்த காலத்தில் அரசர்களாக இருந்தவர்களை சொல்லலாம். அவர்களை அரசர்களாகவா ஆண்டவன்(அல்லது இயற்கை) படைத்தான்.அவனுடைய முன்னோர்களில் எவனாவது ஒருத்த மற்றவங்களை அடித்து பிடித்து நான்தான் பெரியவன் மற்றவங்களெல்லாம் நான் சொவதை கேட்க வேண்டும் என்று சொல்லித்தான் அரசனாகியிருப்பான்.அவனின் வழி வந்தவர்கள் ஆட்டோமேடிக்காக பரம்பரையாக அரசனாகியிருப்பார்கள். மற்றவர்கள் இடம் கொடுத்ததால்தான் அவர்கள் அரசரானார்கள். அது போலத்தான் இதுவும்.இப்போழுதும்மென்ன தாழ்த்தப்பட்டவர்களிலும், பிற்படுத்தப்பட்டவர்களிலும் உள்ள கிரீமி லேயரில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கிகீடை தவிர்க்கலாம் என்றுதான் கூறுகிறார்கள்.

    ReplyDelete
  4. ஜாதி என்பது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாக இருக்கும் வரை இது போன்ற வாதங்களை பேச முடியாது... இன்னும் ஒரு 20 வருடங்களாவது ஆகும்... இது போன்ற வாதங்களை மக்கள் ஏற்க... எந்த ஒரு திட்டத்தையும் 5வருடங்களுக்கு ஒரு முறையாவது ஆய்வு செய்வார்கள்... ஆனால் இந்த விஷயத்தை மட்டும் செய்ய மாட்டார்கள்... காரணம் செய்து எந்த முடிவெடுத்தாலும் பிரச்சனையாகும்... ஆகாவிட்டாலும் அரசியல்வாதிகள் ஆகிவிடுவார்கள்... சுதந்திரம் வாங்கவில்லை நாம்... எஜமானர்களை மாற்றியுள்ளோம்... They still divide and rule us...

    ReplyDelete

உங்கள் சிந்தனைகளையும் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...