Friday, August 3, 2012

இதற்கும் போராடுவோம்...

செய்திதாளை விரித்தவுடன் கண்ணில்பட்ட செய்தி நீண்ட நாட்களாக என் சிந்தனையை தூண்டிய ஒரு விஷயத்தை பகிர்ந்துக்கொள்ள தூண்டியது. மாணவியை கற்பழித்த டாக்டர்... என்ற செய்தியே அது.

விஷயம் இதுதான். 

ஒரு +2 மாணவி காய்ச்சல் என்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த ஆஸ்பத்திரியின் மருத்துவர் அவரை கற்பழித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. பத்திரிகைகள் அல்வா போன்ற விஷயம் கிடைத்ததில் அந்த டாக்டரே மறந்துப்போன பழைய விஷயங்களை பிரசுரிக்க ஆரம்பித்து விட்டன. அந்த குற்றச்சாட்டு உண்மையா?  பொய்யா? என்று சட்டம் தன் நத்தை வேகத்தில் முடிவெடுக்கட்டும். அதுவல்ல இந்த பதிவின் நோக்கம். இந்த சம்பவம் எழுப்பும் கேள்விகளும் சிந்தனைகளும் வேறு மாறியானவை.

சில காலமாய் மருத்துவர்கள் போராட வேண்டிய கட்டாயத்துக்கு அடிக்கடி தள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு முறை போராடும் போதும் பொதுவில் எழும் கேள்வி மற்ற பிரச்சனைகளுக்காகவும் இதே வீரியத்துடன் செயல்படுவார்களா என்பதே... Like it or Not... இது ஒரு நியாயமான கேள்விதான். இதற்கு கோபப்படுவதில் அர்த்தமில்லை. இதற்கு பதில் சொல்லும் கடமை மருத்துவ சமுதாயத்துக்கு உள்ளது. இந்த விவகாரத்திலும் அதே கடமையுள்ளது.

மருத்துவர்களுக்கென்று சில கோட்பாடுகள் உள்ளது. அதில் முதல் கோட்பாடு மருத்துவரை அணுகும் நோயாளிகளிடம் எந்த காரணம் கொண்டும் உணர்வுப்பூர்வமான உறவு கொள்ளக்கூடாது. நோயாளியிடம் தவறாக நடப்பதென்பதை விட பெரிய குற்றத்தை ஒரு மருத்துவர் செய்து விட முடியாது. அதுவும் Sexual offence is the worst form of an offence that a doctor can commit. Even Worse than Murder.

இது போன்ற சமயத்தில் மருத்துவ உலகம் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது. என்ன செய்ய முடியும்... இந்த பிரச்சனையை எப்படி பார்க்கிறோம் என்பதில் உள்ளது பதில்...

மருத்துவர்கள் சமுதாயத்திலிருந்தே வருகின்றனர். ஆகவே அதில் இருக்கும் நல்லவன், கெட்டவன், எல்லோரும் உண்டு... ஆகையால் ஒருவர் செய்யும் தவறை அவர்களின் குணக்கேடாக கருதி இதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்காமல் நாம் நம் வேலையை கவனிக்க செல்லலாம். ஆனால் இந்த விவகாரம் அது போல் Ignore செய்ய கூடியதா என்றால் இல்லை என்பதே பதில்.

எழுந்திருப்பது கற்பழிப்பு குற்றச்சாட்டு. நடந்த இடமோ மருத்துவமனை. சொல்லியிருப்பது ஒரு பேஷண்ட். ஆகையால் மருத்துவ சமுதாயம் இதை கண்டுக்கொள்ளாமல் இருப்பதென்பது மறைமுகமாக அதை ஆதரிப்பது போன்றதாகவே பார்க்கப்படும்.

ஆனால் நம் சட்டத்தின் படி குற்றம் நிருப்பிக்கப்படும் வரையில் ஒருவர் நிரபராதியே. முந்தி கொண்டு நாம் அவரை தண்டிக்க வகையில்லை. நியாயமுமில்லை.

ஆனால் எதிர் பாலினத்தை சேர்ந்த பேஷண்ட்களை எவ்வாறு Examine செய்ய வேண்டும் என்று தெளிவான விதிமுறைகள் உள்ளன. அதன்படி எதிர்பாலினத்தை சேர்ந்த பேஷண்டை எக்காரணம் கொண்டும் தனிமையில் Examine செய்யவே கூடாது. வேறேதில்லாவிட்டாலும் அந்த டாக்டர் நிச்சயமாக இந்த விதிமுறையை மீறி இருப்பதால்தான் இந்த குற்றச்சாட்டு எழுந்திருக்கறது.

உண்மை எதுவாயிருப்பினும் இந்த விவகாரத்தில் மருத்துவ சமுதாயம் செய்ய வேண்டியது ஒன்றுதான்.

இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் இந்த வழக்கை சீக்கிரம் முடிக்க வேண்டுக்கோள் வைக்க வேண்டும். ஒருவேளை விசாரணை முடிந்து இந்த டாக்டர் குற்றவாளி என்று முடிவானால் பொதுவில் அந்த டாக்டரின் ரெஜிஸ்டரேஷன் கான்சல் செய்து அவ்வாறு  செய்யப்பட்டுள்ளதை விளம்பரம் செய்ய வேண்டும். அவர் அதன் பின் பணியாற்ற முடியாத நிலை ஏற்படும். அது இது போல் "சபலம்" தோன்றும் டாக்டர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்.

ஒரு வேலை அவர் நிரபராதி என்று தீர்ப்பானால் அந்த பெண்ணின் குடும்பத்தார் மேல் சங்கத்தின் சார்பில் மான நஷ்ட வழக்கு போட வேண்டும். அது இனி எதிர்காலத்தில் பொய் வழக்கு போட நினைப்பவர்கள் மத்தியில் ஒரு பயம் உண்டாக்க அது வழிவகை செய்யும்.

இந்திய மருத்துவ சங்கம் இந்த வழக்கில் தலையிடும் போது அது மீடியா பப்ளிசிட்டி கூடிய நடப்பாகிவிடும். ஆகையால் மீடியாக்களின் கண்கொத்திப்பாம்பு கவனிப்பில் விசாரணை நடைபெறும். அப்போது சாட்சிகளை வாங்க முடியாது. நியாயமாக விசாரணை நடைபெற வாய்ப்பு அதிகம்.

மருத்துவர்களை அவர்கள் செய்யும் தொழிலுக்காக மதிக்க வேண்டும் என்று  பேசும் அதே சமயம் நம் தொழிலை இழிவு செய்யும் இது போன்ற நிகழ்வுகளில் நாம் என்ன செய்கிறோம் என்பதும் முக்கியம் என்று மருத்துவர்கள் உணர வேண்டும். நடந்தது என்னவென்பது தெரியாமல் மருத்துவரை திட்டுவது தவறென்றால் நடந்தது தவறென்று தெரிந்தும் வாய் மூடி இருப்பது பெருந்தவறு. படித்ததால் மட்டுமே ஒருவர் சக மருத்துவராகி விட முடியாது. அது மட்டுமே அவரின் தவறுகளை நியாயபடுத்த காரணமாகாது. நம் உரிமைகளுக்காக பல போராட்டம் செய்யும் போது மக்களின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் நாம் நம்மிடையே உள்ள கறுப்பாடுகளை இனம் கண்டுக்காட்டுவதே நியாயமாகும். அதை செய்யாதவரை அதற்காக போராடாத வரை மக்களின் கவனத்தை ஈர்பதே எங்கள் நோக்கம் என்று சூளுரைக்கும் நம் போராட்டங்களில் நியாயமில்லை...

1 comment:

  1. சமநிலையில் எழுதப்பட்ட அருமையான கட்டுரை விஜய். நன்றி.

    ReplyDelete

உங்கள் சிந்தனைகளையும் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...