Thursday, November 22, 2012

சிறை: விலை நிலவரம்!


'பணம் புழல் வரைக்கும் பாயும்’. ஆமாம்தமிழகச் சிறைகளில் பணம் பேசும், சாதிக்கும், சலுகை வாங்கும், விளையாடும்.

சில மாதங்களுக்கு முன்பு 'உள்ளே போனஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர், 'என்னால் 555 சிகரெட் குடிக்காமல் இருக்க முடியாதுஎன்றார். 'ஓ... யெஸ்என்று வாங்கி வந்தார்கள். அதனுடைய ஒரிஜினல் விலை, ஒரு காட்டன் 1,050 ரூபாய். உள்ளே 10 டபுள் பாக்கெட்டுகள் இருக்கும். அதற்கு அவர் கொடுத்த விலை 25 ஆயிரம். சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் ஐ.பி.எஸ். அதிகாரி... பிளேடு பக்கிரி என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. நீங்கள் கேட்பது எல்லாம் கிடைக்கும்... பெண்ணைத் தவிர. ஒவ்வொன்றுக்கும் ஒரு ரேட்!

சிறைக்குள் ஒரு பீடியின் விலை 10 ரூபாய். ஒரு பீடிக் கட்டின் விலை 100 ரூபாய். 'பரம ஏழைக் கைதிகளுக்காக ஒரு இழுப்புக்கு இரண்டு ரூபாய்... ரெண்டு இழுப்புக்கு ஐந்து ரூபாய் போன்ற மலிவு விலைத் திட்டங்களும் உண்டு. என்ன காரணமோ தெரியவில்லை, பெரும்பாலான சிறைகளில் காலம்தொட்டு கோல்டு ஃபில்டர் சிகரெட் மட்டும்தான் விற்கிறார்கள். ஒரு சிகரெட்டின் விலை 50 ரூபாய்.

தலா 10 கிராம், 20 கிராம் தொடங்கி 50 கிராம் வரை கஞ்சா உருண்டைப் பொட்டலங்கள் கிடைக்கும். தேவை என்று சொல்லிவிட்டால், சிறையின் அறைக் கதவுப் பூட்டின் பின்புறமாக ஒட்டிவைத்துவிடுவார்கள். இல்லை என்றால், கக்கூஸுக்குள் பார்சல் பண்ணுவார்கள். 10 கிராம் 200 ரூபாய். 50 கிராம் 1,000 ரூபாய்.

கைதிகள் உறவினர்களிடம் பேசுவதற்காக சிறைக்குள் லேண்ட் லைன் தொலைபேசி வைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது. சில மாதங்களுக்கு முன், கோவை சிறையில் ரெய்டு நடத்தி மூட்டை, மூட்டையாக செல்போன்களை அள்ளிய பிறகே, சிறைக்குள் தொலைபேசி வைக்கப்படும் என்று அறிவித்தார் சிறைத் துறை ஐ.ஜி. சிறையில் சொந்தமாக செல்போன் வைத்து இருக்க ஒரு நாள் கட்டணம் 100 ரூபாய். கைதி மொபைலில் பேசினாலும் சரி... பேசாவிட்டாலும் சரி... இதைக் கட்ட வேண்டும். இந்தக் கட்டணம் சிங்கிள் சிம் கார்டுக்கு மட்டும்தான். டூயல் மொபைல்களில் கூடுதல் சிம் கார்டுகளைப் பயன்படுத்த, ஒவ்வொரு சிம் கார்டுக்கும் கட்டணம் ரூ.50. வார்டன்கள் நடத்தும் மொபைல் போன் பூத்களிலும் பேசலாம். மதுரை சிறையில் பி.எஸ்.என்.எல். தொடங்கி ஏர்டெல், ஏர்செல், ஐடியா மொபைல் வரைக்கும் வைத்து இருக்கிறார்கள். கட்டணம் கம்பெனியின் டாரிஃபை விட ஐந்து மடங்கு அதிகம்.
சிறையின் அறைக்குள் தாராளமாக டி.வி.டி. ப்ளேயர் போட்டு சினிமாவும் பார்க்கலாம். ஆனால், சொந்த டி.வி.டி. கூடாது என்பது எல்லா சிறைகளிலும் எழுதப்படாத ஆணையாம். இன்றைய நிலவரப்படி ஒவ்வொரு மத்திய சிறையிலும் 20 முதல் 50  டி.வி.டி. ப்ளேயர்கள் இருக்கின்றன. ஒரு நாள் வாடகை 500 ரூபாய். டி.வி.டி. ப்ளேயரை விட டி.வி.டி-களின் விலைதான் அதிகம். பழைய படத்துக்கு 250 முதல் 500 வரை ஓர் இரவு (அண்ணாவின் 'ஓர் இரவுபடம் அல்ல!) வாடகை.  புதுப் படங்களுக்கு 1,000 ரூபாய். கில்மா படங்களுக்கு வாடகை 3,000 ரூபாய். சிறைக்குள் கில்மா வகையறா டி.வி.டி-களுக்குத்தான் டிமாண்டு!

சிறைக்குள் பெண் கிடைக்காது என்றுதான் சொன்னேன். ஆனால், வாட்டசாட்டமான பெண் சாயல்கொண்ட ஆண் கிடைப்பார். ரேட் 20 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது. அதேபோல் இரண்டு ஹோமோ கைதிகள் நெருங்கிப் பழகினால்கூட, அது இலவசம் கிடையாது. காவல் காக்கும் வார்டனுக்கு 5,000 கட்டணம் அழ வேண்டும்.
 இவை எல்லாம் மேஜர் மேட்டர்கள். வீட்டுச் சாப்பாடு உள்ளே வருவதில் தொடங்கி, மார்க்கெட்டில் மட்டன் வரைக்கும் எல்லாம் கிடைக்கும். ஆளும் கட்சியால் நீண்ட நாட்களாக 'உள்ளே... வெளியேவிளையாட்டு நடத்தப்பட்டு, சமீபத்தில் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அவர். புழல் சிறையில் அவர் இருந்தபோது வீட்டில் இருந்து நண்டு வறுவல், மீன் வறுவல், மட்டன் குழம்புடன் சாப்பாடு பெரிய கேரியரில் போகும். அதிகாரியின் அறையில் டேபிளில் வைத்து அதிகாரியுடன்தான் அவர் சேர்ந்து சாப்பிட்டார். ஆனாலும், டிப்ஸ் என்ற பெயரில் அவர் கொடுத்த கட்டணம் நாளுக்கு 5,000 ரூபாய்.

ஜெயில் வாழ்க்கை கஷ்டமோ... இல்லையோ, ரொம்ப காஸ்ட்லி!

நன்றி - டி.எல்.சஞ்சீவிகுமார் (டைம்பாஸ்)

Wednesday, November 21, 2012

தாக்கரேவும் வெறுப்பு அரசியலும் - ஒரு உளவியல் அலசல்

பால் தாக்கரே மறைந்தார். இறந்தவர்களைப் பற்றி தவறாக பேசக்கூடாதென்றாலும் தாக்கரேவின் சாதனைகள் என்னவென்று பார்த்தால் அதில் புகழ்ந்து பேச ஒன்றுமில்லை என்பது விளங்கும். ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் அவர் யாரோ ஒரு எதிரியை மராட்டிய மக்களுக்கு உருவாக்கியே செல்வாக்குடனிருந்தார். முதலில் தென்னிந்தியர்கள், அதன் பின் முஸ்லிம்கள், அதன் பின் வடஇந்தியர்கள், பெண்கள், என்று அவரின் வெறுப்புக்கு ஆளாகாதவர்களே இல்லை என்னுமளவுக்கு அனைவரையும் அவர் வெறுத்தார், வெறுக்க வைத்தார். தாக்கரேவின் சாதனை என்னவென்று பூதக்கண்ணாடி கொண்டு தேடினால் மிஞ்சுவது ஒன்றுதான். இந்திய அரசியலில் வெறுப்பு என்பது விளிம்போர அரசியல் கட்சிகளின் ஆயுதம் என்பதை மாற்றி ஒரு ஓட்டு உற்பத்தி செய்யும் அட்சயப்பாத்திரம் என்றாக்கியதே. அதில் எந்தளவுக்கு அவர் வெற்றிப்பெற்றுள்ளார் என்றால் அவரின் இறப்புக்கு பின் கூட அவரை பற்றிய கருத்துக்களை வெளியிட அனைவரும் தயங்குகின்றனர். சமீப தமிழக அரசியல் சமூக நிகழ்வுகளைப் பார்க்கும்போது தாக்கரேவை ஒரு மராட்டிய நிகழ்வாக மட்டும் கொள்ள முடியாதுள்ளது.  ஜாதி, மதம் மொழி என்ற மேல்பூச்சுகளை களைந்துவிட்டு பார்த்தால் எந்த ஒரு தீவிர இயக்கமும் இறுதியில் பரப்புவது ஒன்றையே - வெறுப்பு. தினம் பார்க்கும், பழகும் முகத்தைக் கூட அழிக்க துடிக்க வைக்கும் வெறுப்பு. "அடி" என்று தலைவன் உத்தரவிட்டதும் பாய்ந்து அடிக்கும் வெறி தோன்றுவது ஏன்? பப்புக்குள் நுழைந்து பெண்களை அடித்து இழுத்து வருபவர்கள், ஒரு இனத்தை மதத்தை ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தாலேயே அவர்கள் மீது வன்முறையை பிரயோகிப்பவர்கள், இவர்கள் எல்லாம் பல சமயம் சாதாரணர்களாகவே இருக்கின்றார்கள். வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பம் குழந்தை என்று வாழும் இவர்கள் எப்படி வன்முறையாளர்களாகின்றனர்?இந்த வெறுப்பு அரசியலின் உளவியல் காரணிகளை முடிந்தளவுக்கு இந்தப்பதிவில் பார்ப்போம். 

நாம் இயல்பிலேயே வன்முறையை விரும்புபவர்களல்ல. நம்மிடம் "இவன் உனக்கு எதிரானவன். அவனை அடி" என்று யாரும் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டோம். ஆகவே நம்மை மாற்றுவது எப்படி?  எந்த ஒரு போராட்டத்தின் ஆரம்பமும் நியாயமான காரணமாகவே இருக்கும். அதே போல் எந்த ஒரு இயக்கமும் நியாயமான காரணத்துடனே ஆரம்பிக்கப்படுகிறது. என் மாநிலத்தில் எனக்கு வேலையில்லை என்னும்போது அது நியாயமான காரணம். யாரும் ஒப்புக்கொள்ளும் நிஜப்பிரச்சினை. அதற்கு காரணம் என்னவென்று கேட்கும் போதுதான் தீவிர இயக்கங்களின் பார்வை மாறுபட ஆரம்பிக்கின்றது. பிரச்சினைக்கு காரணமான சிக்கலான சமூகக்காரணிகளை அவர்கள் எளிமைப்படுத்துகிறார்கள். திறமையின்மை, வேலையிடத்தில் நடந்துக்கொள்ளும் முறை என்பது
போன்ற நம்மைச் சுட்டும் விஷயங்களைப் பேசாமல் நமக்கு ஒரு எதிரியை தருகிறார்கள். அந்த எதிரியை வெறுக்கச் சொல்கிறார்கள். இதுதான் வெறுப்பு அரசியலின் முதல் படி. 

ஆனால் அதன் பின்னும் நாம் வன்முறையை கையாள மாட்டோம். அடுத்து பேச்சு. ஹிட்லர் முதல் இன்றைய ஜாதி அரசியல்வாதிகள் வரை அனைவரும் கடைப்பிடிக்கும் முதல் ஆயுதம் - பேச்சு. இது முதலில் ஜாடைமாடையாக சில சமயங்களில் நகைச்சுவையுடன் இருக்கும். அது மெல்ல பரவும்போது நம் சமுதாயம் அதிகம் கண்டுக்கொள்ளாது. இதனால் ஈர்க்கப்பட்டு வருபவர்களிடம் இந்த தலைவர்கள் போடும் முதல் கட்டளை - எதிராளியிடம் உள்ள தொடர்பு அனைத்தையும் கத்தரி, நம்மை சேர்ந்தவர்களுடன் மட்டுமே பழகு  என்பதே. தாக்கரேவின் மராட்டியர்களுக்கான 12 கட்டளைகளில் இது தெளிவாக இருந்தது. அதேபோல் எதிராளிகளை இழிவுப்படுத்தவும் இவர்களைப்போல் கிண்டல் செய்யவும் இவர்களின் அடிப்பொடிகள் ஆரம்பிக்கும். அதையும் ஊக்குவிப்பார்கள்.

அடுத்த படியாக வெளிப்படையாக வெறுப்பை உமிழ ஆரம்பிப்பார்கள். சமூகம் இப்பொழுது அவர்களைத் திரும்பிப்பார்க்க ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் அதிகாரவர்க்கம் அவர்களை எப்படி எதிர்க்கொள்வதென்ற குழப்பத்தில் இருக்கும். அதன் எந்தவொரு நடவடிக்கையும் அவர்கள் சூழ்ச்சியாகவே வருணிப்பார்கள். ஏற்கெனவே எதிராளியுடன் எந்த தொடர்பில்லாமல் இருக்கும் மக்களிடம் இந்த உருவாக்கம் பயத்தை பரவ செய்யும். அடுத்தப்படியாக அவர்களுக்கு எதிர்க்கருத்து கொண்டவர்களை துரோகிகளாக்குவார்கள், அவர்களுக்கும் எதிரணிக்கும் தொடர்ப்பிருப்பது போன்ற மாயையை உருவாக்க ஆரம்பிப்பார்கள்.  திரும்பிய பக்கமெல்லாம் சூழ்ச்சியும் எதிராளியின் பயமுறுத்தலும் இருப்பது போன்றே இவர்கள் பேசுவது இருக்கும். பயமும் குழப்பமும் ஆட்கொண்ட இவர்களின் தொண்டர்கள் இந்நிலைக்கு அவர்களை ஆளாக்கிய "எதிரிகளை(!!!)" முழுமையாக வெறுக்கத் தொடங்குவார்கள். இந்த மன நிலை உருவாக்குவதே இவர்களின் நோக்கம். 

வெடிக்க காத்திருக்கும் இந்த எரிமலை மனிதர்களுக்கு அடுத்தப்பொறியை அவர்களே உருவாக்குகிறார்கள் அல்லது சில சமயங்களில் தானே அமைகிறது. சின்னதோ பெரியதோ இவர்களின் எதிராளிகளின் ஏதோவொரு செயல் அமைகிறது அல்லது அமைந்ததாக காட்டப்படுகிறது. ஏற்கெனவே வெறியில் உள்ள கும்பல் வன்முறையில் இறங்குகிறது. இதிலும் முதல் கட்டம் உடமைகளையும் மனங்களையும் சேதம் செய்வதாகவே இருக்கின்றது. சில வருடங்கள் முன் பீகாரிகள் மீதி சிவசேனையின் குட்டி MNS நடத்திய அட்டுழியம் போல். இது வரை உறங்கிக்கொண்டிருக்கும் சமூகம் விழித்துக்கொண்டு இவர்களை கண்டிக்க ஆரம்பிக்கிறது. ஓட்டை மட்டும் தேடும் அரசியல்வியாதிக்கு இது போதும். ஆனால் அதையும் மீறி போகும் போது நிகழும் வன்முறையே கலவரமாகி பலி வாங்குகிறது. 

இதை எப்படி எதிர்க்கொள்வது? ஜனநாயக சமுதாயத்தில் மிகப்பெரிய கேள்வி இதுதான். ஆரம்ப நிலையிலேயே இவர்களை அடக்கும் அதிகாரத்தை அரசாங்கத்துக்கு அளித்தால் அது எதிர்க்குரல்களையே ஒலிக்க விடாமல் தடுத்து விடும். அடக்காமல் விட்டாலோ அது என்றாவது ஒரு நாள் யாரையாவது காவு வாங்காமல் விடாது. இத்துடன் நம் நாட்டில் இந்தக் கூட்டம் ஓட்டுக்கு பயன்படுமா என்ற கவலை வேறு உண்டு. இன்றைய அசிங்க அரசியலின் ஆரம்பம் இதுதான்.

அரசாங்கம் தோற்கும்போது தனியொரு மனிதனாக நம்மால் செய்ய முடிந்தது நம்மை இது போன்ற வெறியூட்டல்களில் இருந்து காத்துக்கொள்வதுதான். தான் நடத்திய ஒரு இயக்கத்தில் ஏதோ ஒரு மூலையில் தன் தொண்டர்கள் வன்முறையில் ஈடுப்பட்டார்கள் என்ற காரணத்துக்காக அந்த இயக்கத்தையே நிறுத்திய காந்தி ஏனோ ஞாபகம் வருகிறார். எங்கே தொலைத்தோம் அந்த சத்தியத்தை?