Monday, May 14, 2012

அன்புடனும் அக்கறையுடனும் பாலகுமாரன்...

சமீப காலங்களில் நான் படித்ததில் என்னை மிகவும் தொட்டது... அனைவரும் கண்டிப்பாக படியுங்கள். பகிருங்கள்... படித்தப்பின் எந்த நம்பிகையுள்ளவராய் இருந்தாலும் தன் எழுத்துக்களால் நம் வாழ்வை தொட்ட அந்த மனிதருக்காக ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள்....


இதை அழுத்தினால்......


இதை தெளிவாக படிக்கலாம்...






































மீண்டும் சந்திப்போம் நண்பர்களே......

Sunday, May 13, 2012

நித்தியானந்தாவும் பறக்கும்தட்டும்....


நித்தியானந்தா ஆதீனம் ஆனாலும் ஆனார், எல்லோர் வாய்க்கும் ஓட்ஸாகவே அது மாறிப்போனது. அதிலும் நான் மனநல மருத்துவன் என்ற காரணத்தால் இவ்வளவு நடந்தப்பின்னும் அவரை நம்புபவர்களுக்கு என்னதான் பிரச்சனை என்பது போன்ற கேள்விகளை அடிக்கடி சந்திக்கிறேன். இதை கேட்பவர்களின் அடிப்படை சந்தேகம் - இத்தனைக்கும் பின்னும் எப்படி இதுப்போன்ற ஒருவனை நம்ப முடியும் என்ற ஆச்சர்யமே...

இதற்கு காரணம் உள்ளதா????... இது நித்தியானந்தா என்ற தனிமனிதனின் "Charisma" என்று மட்டுமே சொல்ல முடியுமா?.... இதெற்கெல்லாம் விடை தெரிய வேண்டுமானால் உங்களுக்கு ஒரு பறக்கும் தட்டின் கதை தெரிய வேண்டும்.

1954ஆம் ஆண்டு. அமெரிக்காவில் மரியன் கீச் என்ற பெண்மணி ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கிறார். அதன் அடிப்படை நம்பிக்கை அவருக்கு வந்த ஒரு கனவு. அதில் வேற்றுக்கிரகவாசிகள் அவரை தொடர்புக்கொண்டு டிசம்பர் 21 ஒரு பெரும் வெள்ளம் ஏற்பட்டு உலகம் அழியப்போகிறதென்றும் அதற்குள் அவரிடம் வந்து சேர்பவர்களை அந்த வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டில் வந்து காப்பாற்றுவார்கள் என்றும் கூறியதாக உலகத்துக்கு அவர் தெரிவிக்க அவர் வீட்டில் இடம் பிடிக்க பணம் கொண்டு வந்து கொட்டி பலர் சேர்ந்தனர். அவர்களில் ஒருவர் லான் ஃபெஸ்டிங்கர்(Leon Festinger) என்ற உளவியல் ஆராய்ச்சியாளர். அவர் இந்த கூத்தின் முடிவை காண்பதென்ற நோக்கத்துடன் வந்தவர். அந்த தினமும் வந்தது.

இரவு 12 ஆனது. அங்கிருந்த அனைவரும் சற்றே கலக்கம் அடைய துவங்கினர். நேரம் ஆக ஆக அனைவருக்கும் உண்மை உரைத்தது - "எந்த பறக்கும் தட்டும் வரப்போவதில்லை. உலகம் நாளையும் இருக்கும் நாளை மறுநாளும் இருக்கும்." என்று.

உடனே அவர்கள் மரியன் கீச்சை தூக்கிப்போட்டு உதைத்திருப்பார்கள் என்று நீங்கள் எதிர்ப்பார்த்திருக்கலாம். ஆனால் நடந்ததோ வேறு...

உலகம் அழிய ஒரு மணி நேரமிருக்கையில் மரியன் கீச்சுக்கு ஒரு புது செய்தி அயல்கிரகவாசிகளிடமிருந்து வந்தது. இந்த பூமியில் அவர்கள் சொல்லை மதிக்கும் மனிதர்கள் இருப்பதால், இதற்கு மற்றுமொரு வாய்ப்பு தர தீர்மானித்து வெள்ளத்தை சற்றே திசைத் திருப்பி விட்டார்கள்!!! என்று... இதை கேள்விப்பட்ட அந்த கூட்டம் இந்த நல்ல செய்தியை பரப்பி இன்னும் அதிகம் பேரை நம்ப வைத்து இந்த உலகத்தின் ஆயுளை நீடிப்பதேன்று கிளம்பி விட்டனர்.!!!!!!!!!!

இதற்கு லான் ஃபெஸ்டிங்கர் கொடுத்த பெயர்தான் - காக்னிடிவ் டிஸ்சொனன்ஸ் (Cognitive Dissonance).  பல்லையுடைப்பது போன்று இருந்தாலும் இது ஒரு வகையில் நமக்கு அறிமுகமான ஒரு விஷயமே. திராட்சைப்பழத்துக்கு ஆசைப்பட்ட நரியின் கதை கூட இதற்கு ஒரு உதாரணம்தான்.

நித்தியானந்தாவுக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா....

மனித வாழ்வில் உள்ள நிலைகள் மாறுமென்பதை ஏற்றுக்கொள்ள மனிதர்களுக்கு ஒரு ஆதாரம் தேவைப்படுகிறது. நித்தியானந்தா, மரியன் கீச் போன்றவர்கள் பக்தியாகவோ பறக்கும் தட்டில் வந்து அழைத்து செல்லும் அயல்கிரகவாசிகளாகவோ அந்த ஆதாரத்தை தருகின்றனர். அதனால்தான் அவர்கள் உலகம் அழியும் என்றாலோ ஹீலிங் டச் முலம் வியாதிகள் குணமாகும் என்றாலோ உடனே நம்புகின்றனர். ஏதோ ஒரு தருணத்தில் இவர்கள் சொல்லும் விஷயம் பொய்க்கும் போது நிலை மாறுமென்ற ஆதார நம்பிக்கையும் கேள்விக்குறியாகின்றது. ஆனால் மனம் அதை ஏற்க மறுக்கிறது – காரணம் அதை ஏற்பதென்பது வாழ்வின் அடிப்படையே தகர்க்கிறது. இதே கஷ்டங்கள்தான் நீடிக்குமென்றால் வாழ்வதின் அர்த்தம்தான் என்ன? இந்த முரண்பாட்டைதான் காக்னிடிவ் டிஸ்சொனன்ஸ் (Cognitive Dissonance) என்கிறார் லான் ஃபெஸ்டிங்கர்.

இதை தீர்ப்பதென்பது எப்படி? அவர்களுக்கு மூன்று வழிகள் உள்ளது.

எந்த நம்பிக்கை முரண்பாட்டை ஏற்படுத்துகிறதோ அதை மாற்றிக்கொள்ளலாம்.. (எந்த சாமியார் உண்மையா இருக்கான்... இவனால மட்டும்தான் என் கஷ்டத்தை தீர்க்க முடியுமா என்ன... பறக்கும் தட்டாவது வரதாவது...) ஆனால் இதுதான் இருப்பதிலே கடினமான வழி. இதை அவர்கள் செய்தால், இந்த பதிவுக்கே அவசியமில்லை.

அந்த நம்பிக்கையுடன் புது நம்பிக்கைகளை சேர்த்து புதியதொரு நம்பிக்கையை உருவாக்கி கொள்வது. ( பிரம்மச்சார்யம் என்பதை கடைப்பிடிக்க முடியாதவர்கள் துணை ஏற்று கொள்வது தப்பில்லை. அதும் பிரம்மச்சார்யத்தின் ஒரு அங்கம்தான்.(!!!!!!!!) பறக்கும் தட்டு நம்புபவர்கள் இருப்பதால் வரவில்லை. அதனால் இந்த செய்தியை பரப்பி எல்லாரையும் நம்ப செய்வது நம் கடமை.)

கடைசியாக அந்த முரண்பாட்டை ஏற்க மறுத்தோ அது ஒன்னும் பெரிய விஷயமில்ல என்று சமாதானம் கூறியோ அதன் முக்கியத்துவத்தை குறைத்துக்கொள்ளலாம். (அந்த டேப் பொய்... அவர் என்னைக்காவது நான் பிரம்மச்சாரின்னு சொல்லிருக்காரா..)

இப்பொழுது யோசியுங்கள்... நித்தியானந்தா என்று மட்டுமில்லை. எத்தனை விஷயங்களில் நம்மை நாமே இதுப்போன்று ஏமாற்றியுள்ளோம். நித்யானந்தா ஒரு நம்பிக்கை. அதேபோல்தான் தம் அடித்தால் டென்ஷன் குறையும், தண்ணி அடித்தால் கவலை மறக்கும், பைனான்ஸில் பணம் போட்டால் பணம் சீக்கிரம் பெருகும் என்பதெல்லாம். தினம் வாழ்க்கையில் தவறென்று தெரிந்தும் ஏற்க மறுப்பது எத்தனை... நம் முரண்பாடுகளை ஏற்று அவற்றை மாற்றும் முதல் வழியை தேர்ந்து எடுக்கும் தைரியம் உண்டா நமக்கு...

அடுத்த முறை இதுப்போன்ற ஒரு சந்தர்ப்பம் உங்கள் வாழ்வில் ஏற்பட்டால் இதை சிந்தனை செய்யுங்கள் நண்பர்களே...

Monday, May 7, 2012

ஒரு சட்டமும் சில கேள்விகளும்...

கடந்த வாரம் நம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி நன்றாக பிரியாணி மொக்கி விட்டு விட்டத்தைப்பார்த்து படுத்து பல் குத்திக்கொண்டே NRHM (தேசிய ஊரக வளர்ச்சி திட்டம் ) ஏன் உருப்படாமல் போகிறது என்று யோசிக்கும் பொழுது டொய்ங் என்று அவருக்கு ஒரு பல்பு உதிக்க "எடுறா பேப்பரை" என்று ஒரு உத்தரவு போடுகிறார்.

"இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால் நம்மூர்ல படிச்சுப்புட்டு அடிச்சு பிடிச்சு எப்படியோ வெளியூர் படிக்க போகிற பயபுள்ளைங்க திரும்பாம அங்கனையே தங்கிடறாங்க. இதனால நம்ம கிராமத்துல வேல பாக்க ஆள் இல்லாம போய்டுச்சு. போன வருஷம் மட்டும் படிச்ச 1,20,000 பேர்ல 3000 பேர் வெளிய போய்ட்டாங்க. அதுல 30% திரும்பியும் வந்துட்டாங்க. இருந்தாலும் போன 70% பேரால நம்ம ஊர் ஜனங்களுக்கு எம்புட்டு எழப்பு... இதனால பெரியவங்கலாம் ( வேற யாரு அண்ணன்ந்தேன்....) யோசிச்சு(!!!!) இனி அமெரிக்கா படிக்க போற டாக்டர்ல்லாம் உங்க சொத்த எழுதிக்கொடுத்துட்டு (Bond எழுதி கொடுத்து விட்டு) போய்டணும்" என்று தண்டோரா போடு விட்டார்.

நகைச்சுவை தவிர்த்து பார்த்தால் இது எந்த லட்சணத்தில் நம் நாட்டின் அதிகாரிகளும் அமைச்சர்களும் இயங்குகின்றனர் என்று தெரிய வைக்கும் ஒரு ஆணை. இது எழுப்பும் கேள்விகள் பல.

இந்த ஆணை வெளிநாடு செல்லும் மருத்துவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என் கேள்வி ஏன் மற்ற வேலை செய்பவர்களில் யாரும் வெளிநாடு செல்லவில்லையா? உண்மையில் அன்றிலிருந்து இன்று வரை வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளவர்கள் மற்றவர்கள்தான். அவர்களை விட்டுவிட்டு மருத்துவர்களை மட்டும் குறிவைப்பது ஏன்? அது சரி அமெரிக்கா செல்லும் மருத்துவர்களை கட்டுப்படுத்துவீர்கள்... NOC கேட்காத ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அரபு நாடுகளுக்கு போகும் மருத்துவர்களை என்ன செய்வீர்கள்...

வெளிநாடு சென்று வாழும் இந்தியர்களுக்கு உந்துதல் ஏது? யாரும் தன் சொந்தங்களை மண்ணை விட்டு சென்று மொழி புரியாத மனிதர்களுடன் போராட விரும்பி செல்வதில்லை. இங்கே காட்டப்படும் அநியாயமான பாகுப்பாடும் திறமை இருந்தும் போட வேண்டிய எதிர்நீச்சல்களுமே அவர்களை அந்நிய மண்ணின் சுகங்களை பெரிதாக எண்ண வைக்கிறது. அதை தீர்க்காமல் இது போன்ற அறிவிப்புகள் வெளியிடுவது தங்களின் தொலைநோக்கு பார்வையின்மையை மறைக்க இவர்கள் நடத்தும் நாடகங்களே தவிர வேறொன்றுமில்லை. 2100 மருத்துவர்கள்தானா படித்தவர்கள். மிச்சமுள்ள 117900 பேர் கொண்டு நம் கிராமங்களை முன்னேற்ற முடியாதா?

சரி... இவர் சொல்வது போல் சென்றவர்கள் திரும்பி வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களை எங்கே வேலைப்பார்க்க சொல்கிறார். எந்த வசதியுமில்லாத கிராமப்புறங்களில் இவர்களால் வேலைப்பார்க்க முடியுமா. அது மயிலை பாட சொல்வது போன்று முரணான விஷயமில்லையா? நோபல் பரிசு பெற்ற ஹர்கோபிந்த் குரானா, ராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கேற்ற வசதிகளை நாம் இங்கே ஏற்படுத்தி விட்டோமா? அதில்லாமல் அவர்களை செல்ல விடாமல் தடுத்திருந்தால் அது மனிதக்குலத்துக்கு அவர்களின் அர்ப்பணிப்பை தடுக்கும் செயலாகியிருக்காதா? 

இது போன்ற அர்த்தமில்லாத சட்டம் இயற்றுவத்தின் மூலம் நம் கவனத்தை உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைத்திருப்பி சுவிஸ் வங்கிகளில் பணத்தை குவிக்கும் அரசியல்வாதிகளை விட தன் வாழ்க்கையின் நலனுக்காக நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள் எவ்வளவோ மேல்...

சரிதானா....

சிந்தனை செய்யுங்கள்....

Friday, May 4, 2012

யார் குற்றம்

செய்திதாள்களில் சில சமயம் வினோதமான செய்திகளை படிக்க கிடைப்பதுண்டு. நேற்று மும்பை ஹைகோர்ட்டில் ஒரு விவாகரத்து வழக்கு வந்தது. அதன் சாராம்சம் இதான்.

பிரதீப் என்பவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய கோரியுள்ளார். அதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள்.
1. மனைவிக்கு சமைக்க தெரியவில்லை.
2. அவருக்கு துணி மடிக்க தெரியவில்லை.
3. தினமும் சாமி கும்பிட மறுக்கிறார்
4. அவர் சம்பளத்தை அப்படியே தர மறுக்கிறார்.

இதெல்லாம் பரவாயில்லை என்பது போன்ற கடைசிக்காரணம் - முதலிரவில் அவர் தன் கணவனிடம் ஆணுறை அணிய சொல்லுயிருக்கிறார். காரணம் அவர்களது குடும்பச்சூழல் காரணமாக சற்றே பணம் சேர்ந்தப்பின் குழந்தைக்கு முயற்சிப்போம் என்று.

இந்த வழக்கை பற்றி படித்ததுடன் என் மனதில் எழுந்த கேள்விகள் இவை.

1. இதெல்லாம் ஒரு காரணமா ஒரு மணவாழ்க்கையை முறிக்க.
2. ஒரு கோர்ட்டில் இதை காரணங்களாக சொல்லும்மளவுக்கு ஆணாதிக்க மனம் கொண்டவர்களாக இருக்கும் அந்த கணவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் இதை கோர்ட்டில் சொல்லும் வக்கீலுக்கும் என்ன தண்டனை.
3. அந்த பெண்ணிடம் நீதிபதி படித்த நீ ஏன் இந்த திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாய் என்று கேட்டதற்கு தன் தங்கை திருமணத்திற்க்காக தன் திருமணத்தை அவசரப்படுத்தியதால் ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. என்று கூறியுள்ளார். (அவரின் வயது 26). கல்யாணத்தை கடமையாய் நினைத்து ஒத்து வராத இரண்டு பேரை சேர்த்து வைத்து அவர்களின் வாழ்வை கேள்விகுறியாக்கியது எது - பெண்களின் திருமணத்தை கடமையாய் கருதும் பெற்றோரா? அந்த நெருக்குதலை தரும் இந்த சமுதாயமா?
4. எத்தனையோ பொருத்தம் பார்க்கும் போது பேசி பழக சந்தர்ப்பங்களை தந்து மனப்பொருத்தம் பார்க்க தயங்குவது ஏன்?

இதையேதான் அந்த நீதிபதியும் சொல்லியுள்ளார் -

"In their order, the judges said the case was an eye-opener for those who were yet to marry. They said that especially in the case of arranged marriages, the prospective husband and wife should get to know each other and see if they could live happily together. "It is the duty of (both sets of) parents to consider various aspects before the actual marriage takes place.""


எத்தனை யோசித்தாலும் இறுதி வரை விடை தெரியாத கேள்வி இது ஒன்றுதான்....

"பெண் சுதந்திரம் என்ற அடிப்படை மனித நாகரீகத்தை என்று நம் சமுதாயம் கற்கும்???"


சிந்தனை செய்யுங்கள் நண்பர்களே.....

Thursday, May 3, 2012

சனாகானும் பத்திரிகை தர்மமும்

எப்பொருள் குறள் யாருக்கு பொருந்துமோ இல்லையோ பத்திரிகைகளுக்கு நன்கு பொருந்தும். இன்றும் நம் மக்களை பொறுத்த வரை பத்திரிகையால் ஒருவன் குற்றம் சாட்டப்பட்டால் அவன் குற்றவாளி. அச்சில் ஏற்றப்பட்ட குற்றம் எந்த நீதிமன்றத்திலும் நிருப்பிக்கபடாவிட்டாலும் குற்றமே.

இன்று தினமலர் வலைத்தளம் சென்றவர்கள் இந்த செய்தியை கண்டிப்பாக பார்க்கலாம்.


ஆனால் இதை படித்த எத்தனை பேர் இந்த புகைப்படத்தை பார்த்திருக்க போகிறீர்கள்.


இதென்னடா படம் என்கறீர்களா....

இதில் இருப்பவர்கள்தன அந்த செய்தியில் வந்த கைதான பெண்கள்... இதில் வட்டமிட்டு காட்டப்பற்றிருபவர்தான் சனா கான். அவர் ஒரு junior artist பாலிவுடில்.

இப்பொழுது இதை ஆழ்ந்து சிந்தித்துப்பாருங்கள்....

இன்று எத்தனை பேர் அந்த செய்தியை வாசித்திருப்பார்கள். அவர்கள் அனைவரின் எண்ணத்திலும் இனி சனாகான் ஒரு விபச்சாரி. எந்த தவறும் செய்யாமல் அவரை ஒரு கூண்டில் ஏற்றப்பட்டு தண்டனையும் வழங்கிவிட்டார் அந்த பத்திரிகைக்காரர். நிஜமாக குற்றம் புரிந்த அவருக்கு என்ன தண்டனை.

இதே செய்தியை நடிகையல்லாத மற்றொரு பெண் பற்றி வந்திருந்தால் எத்தனை பேர் உடனே நம்புவோம். அவ்வளவு ஏன்... இதே போன்று ஒரு நடிகரை கைது செய்ததாக செய்தி வந்தால் உடனே நம்புவோமா... ஏன் இந்த முரண்... ஒரு நடிகை என்பதாலா இல்லை ஒரு பெண் என்பதாலா..

நடிகை என்ற ஒரே காரணத்துக்காக அவர் பற்றிய ஒரு ஆதாரமில்லாத செய்தியை உடனே வெளியிட்ட அந்த பத்திரிக்கை நண்பரை போல் எத்தனை பேர் நம்மில் குற்றங்களை நம்பி ஆதாரங்களை புறந்த்தள்ளுகிறோம்.

இறுதியாக ஒரு சினிமா செய்தியைக்கூட விசாரித்து வெளியிட முடியாத நிருபரும் அதன் உண்மை தன்மையை உறுதி செய்யாமல் வெளியிடும் ஆசிரியரும் கொண்ட இந்த பத்திரிகையின் வேறு எந்த செய்தியை நாம் நம்புவது...

சிந்தனை செய்யுங்கள்.....