Friday, December 14, 2012

பி.கு. நான் ரஜினி ரசிகன் இல்லை...

12-12-12 வந்தது... சென்றது...

ரசிகர்களால் பேஸ்புக் பக்கம் முழுக்க போட்டோ, வீடியோ என்று இணையத்திலும் போஸ்டர், ப்ளெக்ஸ் என்று தெருக்களிலும் ரஜினி நீக்கமற நிறைந்திருந்தார். பத்திரிகைகள், டிவிக்கள், ரேடியோ நிகழ்ச்சிகள் என்று அனைத்தும் ஸ்தம்பித்து ரஜினி புகழ்ப்பாடியது. 


இந்த கூக்குரல்களுக்கு இணையாக சில எதிர்க்குரல்களும் ஒலித்தன. "12-12-12ம் மற்றொரு நாளே... இது போல வெறிபிடித்து அலையாதீர்கள்..." இதுவே அவற்றின் சாரம். நியாயமாகவே தோன்றினாலும் அவர்களின் காலக்கோட்டில் சற்றே பின் சென்றால், அங்கே பாரதி நீக்கமற நிறைந்திருந்தார். ரஜினி ரசிகர்களுக்கு சற்றும் குறைவில்லாத வெறியுடன் பாரதி வாழ்த்தப்பட்டிருந்தார். ஏன் இந்த முரண்பாடு?

அதற்காக பாரதியும் ரஜினியும் ஒன்றா என்று கேட்பவர்களுக்கு, பாரதியானாலும் சரி, ரஜினியானாலும் சரி, அவரவர் தொழிலில் சிறந்தவர்கள்...அவர்களின் ரசிகர்களுக்கு ஆதர்ஷப்புருஷர்கள்... பாரதியை வாழ்த்துவதை ஏற்றுக்கொள்ளும் நாம் ஏன் ரஜினியை ஆராதித்தால் குறை கூறுகிறோம்? இதை செய்யாதே என்று அந்த ரசிகர்களுக்கு சொல்ல என்ன உரிமை நமக்கு உண்டு? இவரை இவ்வளவுதான் வாழ்த்தலாம் என்று முடிவு செய்யும் உரிமையை யார் தந்தது? ரஜினி ரசிகர்கள் வைத்திருப்பது பைத்தியக்காரத்தனமான அன்பென்றால், இறந்த ஒரு மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவதும் தமிழில் சாதித்த ஒரு கவிஞருக்கு "Happy Birthday to you" என்று எழுதுவதும் என்ன மாதிரியான அன்பு?

இந்த எதிர்குரல் எழுப்புபவர்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் ரஜினி மீது இவ்வளவு எரிச்சல்? அவர் என்றுமே தன்னை நல்ல நடிகனென்று தூக்கி நிறுத்திக்கொள்ளவில்லை. வியாபார நோக்கத்துடன் நடிக்கிறேன் என்று பல முறை ஒப்புக்கொண்டவர். யாரையும் தெரியாத ஒரு துறைக்கு வந்து விடாமுயற்சியாலும் வித்தியாசமான முயற்சிகளாலும் தன் குறைகளை எதிர்கொண்டு முன்னேறி இன்று ஒரு தலைமுறையே தன் கட்டுக்குள் வைத்திருப்பது சாதனையில்லையா? நம் சமூகத்தின் அடையாளமாகி விட்டது சினிமா... இங்கே திரையின் முகமூடிகளே நிஜ முகங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விடுகிறது.முகமூடியை அணிய விருப்பமில்லையென்றாலும், அந்த முகமூடியை நம்பி வரும் ரசிகர்களை என்ன செய்வதென்பது புரியாமல் தானும் குழம்பி மற்றவரையும் குழப்புவது மட்டுமே ரஜினியின் தவறு. மற்றபடி தன் படம் ஓடுவதற்காக அரசியல் பேசுகிறார் என்பதெல்லாம் கற்பனை. பேசாவிட்டாலும் ஓடும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் வாழ்க்கையில் தேவைப்படுகிறது. சுய அடையாளம் கிடைக்குமுன் நம்மை இப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட தூண்டுபவர்களே ஆதர்ஷ மனிதர்கள்... அவர்களை கொண்டாடுவது அந்த ரசிகர்களின் அடிப்படை உரிமை. அதை தவறென்று அந்த ரசிகர்களின் முகத்துக்கு முன் சொல்வது அநாகரீகம். இந்த அநாகரீக எதிர்குரல்களை விட அந்த ரசிகனின் பைத்தியக்கார கூக்குரலே மேல்...