Saturday, October 27, 2012

சின்மயி.... சில சிந்தனைகள்...

கடந்த வாரம் சின்மயி போலீஸிடம் ஒரு புகார் அளித்திருக்கிறார் என்ற செய்தி வந்தப்போது பத்தோடு பதினொன்றாக இதை மற்றுமொரு பிரபல்யர்களின் புகார் என்று அதிகம் கவனிக்கவில்லை. ஆனால் அதன் பின் தீடீரென்று ஒரு கார்டூனிஸ்ட் அதில் இடஒதுக்கீட்டையும் மீனவர்ப்பிரச்சனையும் பற்றி தவறாக பேசிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பின் சட்டென்று பெய்யும் சப்தமான மழையைப் போல் பல நிகழ்வுகள். சரி தவறென்ற விவாதங்கள். ஒரு கட்டத்தில் உண்மைக்கும் கற்பனைகளுக்கும் உள்ள பிரிக்கும் கோடு மங்கி அழியத்துவங்கி விட்டது. எதையும் ஆராயாமல் பேசக்கூடாதென்று அந்த நிகழ்வை பற்றி விவரங்கள் திரட்டினேன். என் கருத்தை உருவாக்கிக்கொள்ள உதவிய பதிவுகள்.

http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html
http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html
http://www.twitlonger.com/show/fumfoi
http://www.chinmayisripada.com/2012/10/facing-abuse-and-backlash-of-rumours.html
http://www.rajanleaks.com/2012/03/blog-post.html
http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html

எல்லாவற்றையும் படித்துப்பார்த்தால் ஒரு வித அசூயையும் அயர்ச்சியுமே மிஞ்சி நிற்கின்றது. என்ன காரணம் சொன்னாலும் , படித்தவர்கள் பேசும் பேச்சா இது? என்ற கேள்விக்கு பதிலில்லை. இணையம் என்பது பொதுவெளி. அவற்றில் இருப்பவை அனைவரின் பார்வைக்கு என்றானப்பின் வைக்கப்படும் கருத்துகளில் ஆபாசம் தவிர்ப்பது கடமை. கடமையை மீறும் போது வரும் பின் விளைவுகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

ஆனால் இந்த விஷயத்தில் பலரும் சின்மயி மீது வைக்கும் குற்றச்சாட்டு அவர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசினார் என்பதே. அது ஒன்றே அவரை ஆதரிப்பதை தடுக்கிறது என்று பலர் கூறியுள்ளனர். ஆனால் அவர் கூறியதை விடவும் பல மடங்கு அதி தீவிரமாய் அதை பற்றி பலர் பல சமயங்களில் பேசி உள்ளனர். எந்த ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து உண்டு. அதை வெளிப்படுத்துவது அவரவர் உரிமை. ஆனால் அந்த கருத்தை நீ தெரிவித்து விட்டாய்... எப்படி தெரிவிக்கலாம் என்று பாய்வது கருத்து தீவிரவாதம். இதில் அவரின் கருத்தை விட பலருக்கு பிரச்சனையாக இருப்பது அவரின் ஜாதிதான். சுஜாதா ஒரு முறை சொன்னதுதான் ஞாபகம் வருகிறது - இங்கே சிலருக்குத்தான் சில கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது.

அடுத்து அவர் சிபாரிசு பிடித்து கைது செய்ய சொன்னார், தன் பிரபலத்தை அதற்கு பயன்படுத்திக்கொண்டார் என்கிறார்கள். அவர் பிரபலமாக இருப்பதால்தானே அவர் குறி வைக்கப்பட்டார். அதிலிருந்து தப்பிப்பதற்கு தன் பிரபலத்தை பயன்படுத்திக்கொண்டார். இதை சரியென்று சொல்லவில்லை. ஆனால் அந்த ஒன்றே எதிர்த்தரப்பினரின் செயலை நியாயப்படுத்துமா?

தமிழ் இணையத்தில் எங்கும் வசவுகளே அதிகம் உள்ளன. கம்யூனிஸ்ட்டுகள் பெரியார்வாதிகளை திட்டுகிறார்கள். பெரியார்வாதிகள் தலித் தலைவர்களை திட்டுகிறார்கள். ஆத்திகர்கள் நாத்திகர்களை திட்டுகிறார்கள். நாத்திகர்கள் ஆத்திகர்களை திட்டுகிறார்கள். எல்லாரும் காந்தியை தவறாமல் திட்டுகிறார்கள். இங்கே பொதுவானவர்கள் படிப்பதற்கு சமையல்கலை தளங்களும் திரை விமர்சனங்களும் மட்டுமே மிஞ்சி உள்ளன.

சின்மயி விஷயத்தில் மிகவும் பயம் தருவது அவரை எதிர்த்தவர்கள் உண்மையிலே யார் என்பதுதான். இவர்கள் சாமானியர்கள். எந்த ஒரு இயக்கத்துடனோ தொடர்பில்லாதவர்கள். பெரிய கொள்கைவாதிகளோ புரட்சியாளர்களோ இல்லை. ஆனால் அவர்களின் வார்த்தையில் தெரியும் வன்மம் - ஒரு கணம் அதிரவைக்கின்றது. எந்தளவுக்கு இவர்களுக்கு வெறியூட்டப்பட்டிருந்தால் இவர்கள் இப்படி பேசுவார்கள். இவர்கள்தான் சமுதாயம் என்றால் எதிர்காலத்தை நினைத்தால் பயம்தான் மனதை கவ்வுகிறது.

ஒன்று மட்டும் புரிகிறது ... இங்கு இன்றும் ஜாதி உயிருடன் நலமுடன் உள்ளது. என்ன காலத்துக்கேற்ப அப்டேட் செய்துகொண்டு பேன்ட் சட்டையில் நடமாடுகிறது. இணையம் உலகத்தையே திறந்திருக்கலாம். ஆனால் மனித மனங்களை திறக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தையா நம் குழந்தைகளுக்கு நாம் தருகின்றோம் என்று நினைக்கும் போது மனதில் வெறும் அவநம்பிக்கையே மிஞ்சுகிறது.

Thursday, October 11, 2012

மின்வெட்டு... நிஜப் பின்னணி!

(சமீபத்தில் வந்த ஆனந்த விகடனில் படித்தது...)

இது 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை. மகாராஷ்டிரத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அமெரிக்காவின் 'என்ரான்’ நிறுவனத்தைக் கொண்டுவந்தார் அன்றைய காங்கிரஸ் முதல்வர் சரத் பவார். மகாராஷ்டிரத்தின் மொத்தத் தேவையில் 18 சதவிகித மின்சாரத்தை 'என்ரான்’ கொடுத்தது. அதற்கு மகாராஷ்டிர மின் வாரியம் கொடுத்த விலை என்ன தெரியுமா? முழு திவால்.    தேசிய அனல் மின்சாரக் கழகம் ரூ.1.80-க்கு ஒரு  யூனிட் மின்சாரத்தை விற்ற காலத்தில், 'என்ரான்’ நிறுவனத்திடம் ரூ.6.80 கொடுத்து வாங்கியது அரசு. தவிர, மகாராஷ்டிர மின் வாரியம் மின்சாரத்தை வாங்குகிறதோ, இல்லையோ... மின் கட்டணம் போக மாதம் ரூ.95 கோடியை நிலைக்கட்டணம் என்ற பெயரில் 'என்ரான்’ நிறுவனத்துக்குக் கொடுத்துவிட வேண்டும். அப்படி ஓர் ஒப்பந்தம். இந்திய மின் துறை வரலாற்றில் மறக்கவே முடியாத கொள்ளை அது.  இப்படி எல்லாம் நடக்குமாஎன்று தானே கேட்க வருகிறீர்கள்? தமிழக அரசு 2005-06ல் 'அப்போலோ குழும’த்திடம் இருந்து வாங்கிய மின் சாரத்தின் விலை என்ன தெரியுமா? ஒரு யூனிட் ரூ. 17.78.  ஒருகட்டத்தில் கட்டுப்படி ஆகாமல், மின்சாரம் வாங்குவதை நிறுத்தியதற்காக அதே ஆண்டில் 'அப்போலோ குழும’த்துக்குத் தமிழக அரசு கொடுத்த நிலைக்கட்டணம் ரூ.330 கோடி. இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் வெளி மாநில நிறுவனங் களைவிடக் கூடுதலான விலையையே கேட்கின்றன. 

 மின்வெட்டு பிரச்னையைப் பற்றி எல்லோருமே பேசுகிறோம். ஆனால், அதன் பின்னணியில் இருப்பது வெறும் பற்றாக்குறை மட்டும் அல்ல; பல்லாயிரம் கோடிகள் புரளும் பன்னாட்டு அரசியல். நமக்கு மின்சாரம் என்பது வெறும் எரிபொருள். ஆட்சியாளர்களுக்கோ அள்ள அள்ள வரும் அரிய வளம். தாதுச் சுரங்கங்களை யும் அலைக்கற்றைகளையும் எப்படித் தனியாருக்கு விற்றுக் காசாக்கினார்களோ, அதேபோல, மின் வளத்தையும் விற்றுக் காசாக்குகிறார்கள். இதற்காகவே கொண்டுவரப்பட்ட அமைப்புதான் மின்சார ஒழுங்குமுறை ஆணையம். நாம் 14 மணி நேர மின்வெட்டைப் பற்றிய கவலையில் இருக்கும் இந்த நேரத்தில்கூட, இன்னொரு மின் கட்டண உயர்வுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மாநில அரசுகள் விரும்பாவிட்டா லும், ஒழுங்குமுறை ஆணையத்தின் விருப்பப்படி கட்டண உயர்வு நடக்கும். 'மின்சாரச் சட்டம் 2003’ மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அவ்வளவு அதிகாரங்களை அளிக்கிறது.

கடுமையான மின் பற்றாக்குறை நிலவிய மாதங்களில் ஒன்றாகக் கடந்த மாதத்தைக் குறிப்பிடுகிறது மத்திய மின் துறை. முரண்பாடாக, அதே காலகட்டத்தில்தான் பங்குச்சந்தையில், மின் உற்பத்தி நிறுவனப் பங்குகளின் விலை ஏழு சதவிகிதம் வரை அதிகரித்தது. எப்படி? நாட்டின் மின் உற்பத்தித் திறனை 1,22,000 மெகா வாட் ஆக அதிகரிக்க மன்மோகன் சிங் அரசு முடிவு எடுத்தது. பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா’ அரசு நிர்ணயித்த இலக்கில் பாதி மின்சாரத்துக்கான நிலக்கரியை மட்டுமே தர வல்லது. இதையே சாக்காகவைத்து, கூடுதல் தேவைக்காக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி யின் விலைக்கு ஏற்ப, மின் கட்டணத்தை மாற்றி நிர்ணயித்துக்கொள்ள மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் சமீபத்தில் அனுமதி அளித்தது அரசு. இதன் தொடர்ச்சியே பங்குகள் விலை எழுச்சி.

நாட்டின் மின் உற்பத்தியை நடப்பு ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 88,425 மெகா வாட் உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது; இதில் தனியார் பங்களிப்பு இலக்கு எவ்வளவு தெரியுமா? 52 சதவிகிதம்! முந்தைய ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் தனியார் பங்களிப்பு 19 சதவிகிதமாக இருந்தது. இந்த ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 52 சதவிகிதம். எனில், அடுத்த ஐந்து ஆண்டுத் திட்டத்தில்?

புதிதாக மாநில அரசுகள் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கவில்லை. மறுபுறம் ஏற்கெனவே தன்வசம் உள்ள பொதுத் துறை மின் உற்பத்தி நிலையங்களையும் படிப்படியாகத் தனியாருக்குத் தாரைவார்க்கிறது. சமீபத்திய உதாரணம், நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 8.33 கோடி பங்குகள் விற்பனைக்குக் கொண்டுவரும் அரசின் திட்டம். இதன் மூலம் அரசிடம் உள்ள பங்குகள் 93.56 சதவிகிதத்தில் இருந்து 88.56 சதவிகிதமாகக் குறையும். தனியார் கை ஓங்கும்.

ஒருபுறம் இப்படி மின்சார உற்பத்தி தனியாரிடம் சிக்க, மறுபுறம் உற்பத்தியாகி வரும் மின்சாரமும் பெருநிறுவனங்களுக்கே அர்ப்பணம் ஆகிறது.உள்ளூர் தொழில் நிறுவனங்கள் 14 மணி நேர மின்வெட்டில் சிக்கிச் சின்னாபின்னமாக,     பன்னாட்டு நிறுவனங்களோ 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தில் கிளைபரப்புகின்றன.

இந்தக் கொடுமை எல்லாம் கொசுக்களுக்குத் தெரிகிறதா என்ன? போர்வையைப் போர்த்தினால் வியர்க்கிறது; விலக்கினாலோ கொசு கடிக்கிறது!

நன்றி - சமஸ் (ஆனந்த விகடன் )


Monday, October 8, 2012

தவறாக சுழலும் சாட்டை...


"சாட்டை பாத்துட்டீங்களா.... டீச்சர்‌ஸ் எல்லாத்தையும் கிழிச்சுருக்காங்க சார்...” என்ற நண்பரின் பரிந்துரையை தொடர்ந்து நேற்று படம் பார்த்தேன். கதை ஒரு modified ஹீரோயிச கதை. “மிகவும் நல்ல” ஆசிரியரான கதாநாயகன் வேலைக்கு சேரும் அரசுப்பள்ளியை சில பல வித்தைகள் கற்று கொடுத்து முதல் இடம் கொண்டு வருவதுதான் கதை. கதை அத்துடன் நின்றிருந்தால் ஒரு “Feel Good” படம் என்று கொண்டு ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் கதாநாயகனை உயர்த்திக் காட்ட இயக்குனர் மற்ற அரசு ஆசிரியர்களை சித்தரிக்கும் பாங்கே நெருடுகிறது.

சாட்டை காட்டும் உலகம் ஒரு உதாரண உலகம். அதில் அனைவரும் ஏதோ ஒரு வகையில் நல்லவர்கள் – ஆசிரியர்களை தவிர. அங்கே “எப்படியாவது இந்த வருடம் ஸ்கூலில் பசங்களை சேர்த்து விடுங்கள்” என்று கட்டளையிட்டு ஊர் முழுக்க ஓட விடும் அதிகாரிகள் இல்லை... இலவசம் என்ற பேரில் அரசு கொடுக்கும் எந்த பொருளையும் தன் சொந்த செலவில் போய் வாங்கி, அதை திருடு போகாமல் பார்த்து அதில் ஒன்று குறைந்தாலும் அசிங்கமாய் திட்டு வாங்க வேண்டிய அவசியம் எந்த ஆசிரியருக்கும் இல்லை... மாணவர்களுக்கு காலணி வழங்கினால் கூட அதற்கு அளவுப்பார்க்க Training கொடுத்து ஆசிரியர்களை வேலை வாங்கும் அரசாங்கம் அதில் இல்லை... எல்லாவற்றுக்கும் மேலாக படத்தில் அனைத்து ஆசிரியர்களும் பாடம் நடத்துகிறார்கள்!!!!... அரசாங்கப் பள்ளிகளில் அதற்கு எத்தனை இடையூறு வருமென்று தெரிந்த ஆசிரியர்கள் இருந்தால் கேட்டுப் பாருங்கள்....

இது போன்று ஒரு முகமாய் ஒரு பிரச்சனையை சித்தரிப்பதின் விளைவு என்னவென்றால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றாலே இப்படித்தான் என்று ஒரு பிம்பத்தை இதுப்போன்ற படங்கள் மக்களிடையே உருவாக்கி விடுவதே. அதன் விளைவு அடுத்த முறை ஒரு பிரச்சனை என்றாலே எந்த தரப்பில் தவறென்று யோசிக்காமல் இவங்க இப்படித்தான் என்று ஒரு தீர்ப்பை வழங்க வைத்து விடுகிறது. சமீபத்தில் ஒரு ஆசிரியையை மாணவன் ஒருவன் குத்திக் கொன்று விட்டான் என்றதும் உடனே Facebook, டிவி என்று எல்லாவற்றிலும் கமெண்ட் குவிந்தது. அவற்றில் முக்கால்வாசி அந்த ஆசிரியை தவறு செய்திருப்பார் என்றே இருந்தன. இறந்தும் கொல்லப்பட்டார் அந்த ஆசிரியை. காரணம் – ஆசிரியர்கள் மட்டுமே தவறு செய்பவர்கள் என்று உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம். யதார்த்த வாழ்க்கை மிகவும் சிக்கலானது. இங்கே ஹீரோவும் கிடையாது வில்லன்களும் கிடையாது.எந்த ஒரு படமும் இதை முழுமையாக பிரதிப்பலிப்பது கடினம். ஆனால் இது போன்ற படம் எடுக்கும் முன் உண்மையிலேயே அந்த இயக்குனர் சமூகத்துக்கு கருத்து சொல்ல விரும்பிருந்தால் ஆசிரியர்கள் தரப்பையும் அவர்களின் பிரச்சனையை பிரதிபலிக்கும் விதமாக ஒரே ஒரு கதாப்பாத்திரம் வைத்திருந்தால் கூட கண்டிப்பாக பாராட்டியிருக்கலாம். அது போல் இல்லாமல் ஒரு கதாநாயகனை உயர்த்தி காட்ட மற்ற ஆசிரியர்கள் அனைவரும் மோசம் என்று காட்டியிருப்பது இயக்குனரின் குறுகியப் பார்வையையே காட்டுகிறது. இதற்கு 100 பேரை சுற்றி சுற்றி அடிக்கும் படம் எடுக்கும் இயக்குனர்கள் எவ்வளவோ பரவாயில்லை.

இந்த படத்தின் மற்றுமொரு கருத்து – எவ்வளவு மோசமான மாணவனாக இருந்தாலும் அவனை அன்பினால் ஒரு ஆசிரியர் சீர்த்திருத்த முடியும் என்பது. மிகவும் நல்ல உண்மையான கருத்து. இதை அனுபவப்பூர்வமாக நான் கண்டுள்ளேன். நான் 7வது படிக்கும் போது எங்கள் வகுப்பில் ஒருத்தி இருந்தாள். எப்போதும் கடைசி மதிப்பெண் எடுப்பாள். ஒரு முறை எங்கள் வரலாறு ஆசிரியர் அவளை நடு வகுப்பில் நிறுத்தி திட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த எங்கள் வகுப்பாசிரியை வெளியே நின்று அதை கவனித்துக்கொண்டே இருந்தார். அடுத்தது அவரின் வகுப்பு. ஆனால் அன்று அவர் எதையுமே சொல்லித்தரவில்லை. வகுப்பு முடிந்து செல்லும் போது அவருடன் அந்த பெண்ணையும் அழைத்துச்சென்றார். அன்று பள்ளி முடிந்து செல்லும்போது அவளைப் பார்த்தேன். தனியே யோசனையாய் உட்கார்ந்திருந்தாள். சற்றே பரிதாபப்பட்டுவிட்டு சென்று விட்டேன். அதன் பின் அந்த பெண் வகுப்பில் தனியாகவே இருப்பாள். பேசவேயில்லை. ஒன்றில்லை இரண்டில்லை – 3 மாதங்கள். அடுத்த பரிட்சை முடிந்து ரேங்க் கார்ட் கொடுக்கும் வரை.... அவள் 4வது ரேங்க் வாங்கியிருந்தாள். அந்த கார்டை வாங்காமல் எங்கள் வகுப்பாசிரியையை கட்டிக்கொண்டு அழுத போது நாங்கள் எடுத்த மூன்று ரேங்க்களை விட அவளின் 4வது ரேங்கே உயர்ந்ததாய் தெரிந்தது. இந்த படத்தின் ஆசிரியர் திக்குவாய் பெண்ணை திருத்தும்போது எனக்கு அந்த பெண்தான் நினைவுக்கு வந்தாள். இன்று அந்த பெண்ணும் அந்த ஆசிரியையும் காலப்போக்கில் மறைந்து விட்டனர். ஆனால் அவரின் அந்த செய்கை உண்டாகிய பாதிப்பு இன்றும் மறையவில்லை.

மொத்தத்தில் சாட்டை படமென்று மட்டுமே கொண்டால் மிகவும் அருமை. ஆனால் சிலர் கூறுவது போல் படமல்ல பாடமென்று சொன்னால் மிகத் தவறான ஒருதலைப் பாடம்.