Wednesday, June 27, 2012

இதை படிச்சிட்டு திட்டுங்க...




“இன்று டாக்டர்கள் ஸ்ட்ரைக்” என்ற flash news பார்த்ததுமே Facebookஇல் திட்டி அப்டேட் போடப்போகும் அன்பர்களே... என்ன விஷயமென்று கூட கேட்காமல் “திட்டுங்க எஜமான் திட்டுங்க ... இந்த டாக்டர்களே இப்படித்தான்...” என்று அதற்கு பதில் காமெண்ட்ஸ் போடப்போகும் நண்பர்களே... திட்டும் முன் இதை ஒரு முறை படித்து விட்டு திட்டுங்க..

இந்த ஸ்ட்ரைக் என்னவென்று முதலில் சொல்லி விடுகிறேன்... இதை நடத்துவது இந்திய மருத்துவச்சங்கம்... இது government, private என்றில்லாமல் எல்லா டாக்டர்களும் இருக்கும் பொது அமைப்பு... இதன் மூலம் 25/06/2012 அன்று ஒரு நாள் மட்டும் அரசு ஆஸ்பத்திரி அல்லாத மற்ற அமைப்புகளில் அவசர சிகிச்சை தவிர்த்து மற்ற நோயாளிகளை மாலை 6 மணிவரை பார்க்கவில்லை. இது ஒரு கவன ஈர்ப்புப் போராட்டம். சரி இதை இன்று செய்ய வேண்டிய அவசியம் என வந்தது???...

சில வருடம் முன் கேத்தன் தேசாய் என்ற அவமானத்தை கைது செய்து கிலோ கிலோவாக தங்கம் எடுத்தார்கள் ஞாபகம் இருக்கிறதா.... அந்த அவமானம் தலைவராக இருந்தது “Medical council of India (MCI)” என்ற அமைப்பு. அதுதான் எல்லா டாக்டர்களையும் கட்டுப்படுத்தும் தலைமை அமைப்பு... அதற்கு election council போல சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு . அது இருப்பதால்தான் அரசியல் தலையீடுகள் குறைவாக மருத்துவத்துறையில் இருக்கும் என்பதால் உருவாக்கப்பட்ட ஒன்று அது. புது மருத்துவக்கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி அளிப்பதிலிருந்து தவறு செய்யும் மருத்துவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் அத்தனை அதிகாரம் குவிந்த அமைப்பு அது. அதனால் யார் அதை control  செய்கிறார்களோ அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள டாக்டர்களை ஆளுகின்றார்கள் என்றால் மிகையாகாது...

கேத்தன் தேசாய் கைதுக்குப்பிறகே இந்த அமைப்பின் நிலைமை கேள்விக்குறியாக இருந்தது. இன்று அதை மட்டுமல்லாது Nursing council, pharmacy council என்று எல்லா கவுன்சில்களையும் கலைத்துவிட்டு அதன் இடத்தில் மத்திய அரசாங்கம் நியமிக்கும் ஒரு குழு செயல்படும் என்று சட்டமேற்றியிருப்பதுதான் முதல் காரணம் இந்த போராட்டத்திற்கு...

இந்த சட்டம் அமலுக்கு வந்தால் மருத்துவ தொழிலே மருத்துவர்கள் கையிலிருந்து சென்று விடும் அபாயம் உள்ளது. அதன் பின் அதிகார வர்க்கமும் அரசியல் வர்க்கமும் ஆசைப்பட்ட காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பாகவே இது உள்ளது. அரசியல் பணமுதலைகளின் கருப்பு பணம் வெள்ளையாக மருத்துவக் கல்லூரிகளை தொடங்கிக்கொள்ளலாம், எதிர் கட்சிகளை மிரட்ட அவர்கள் தலைவர்கள் நடத்தும் கல்லூரிகளை அனுமதி மறுக்கலாம், யார் வேண்டுமானாலும் பணம் தந்து அனுமதி பெற்று கல்லூரி தொடங்கலாம், எதிர்த்து கேள்விக்கேட்டால் அந்த மருத்துவரின் மேல் குற்றம் சுமத்தி அவரின் மருத்துவர் என்ற அதிகாரத்தையே பறிக்கலாம் என்ற நிலை வரும். ஒரு வேளை அது போல் அதிகாரத்தை பறித்தால் அதற்கு மேல் அப்பீல் செய்வதென்பது முடியாது. ஏற்கனவே இருந்ததை சீர் செய்வார்கள் என்று எதிர்ப்பார்த்திருந்த டாக்டர்களுக்கு இது அதிர்ச்சியே தந்துள்ளது. எந்த ஒரு டாக்டர்களின் அமைப்பையும் கலந்தாலோசிக்காமல் இது போன்ற மடத்தனமான முடிவெடுக்க காரணம் என்ன... ஒரு Professionஐ  அதை செய்பவர்கள் அல்லாத மற்றவர்கள் நிர்வாகிப்பதென்பது எந்த புத்தியுள்ள மனிதனும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.. அதும் மருத்துவம் போன்ற உயிர் காக்கும் தொழிலை அரசியல்வாதிகள் தீர்மானிக்கும் நபர்கள் அதிகாரம் செய்வதென்பது இந்த முடிவெடுத்தவர்களின் குறுகிய பார்வையே காட்டுகிறது. இத்தோடு விட்டார்களா...

இந்த சட்டத்தின் மற்றுமொரு புதிய விதி மருத்துவர்களின் தொழில் வாய்ப்புகளையே பறிப்பதாக உள்ளது. Medical councilன் மாநில அமைப்பு State medical council. எந்த மருத்துவ படிப்பு முடித்தப்பின்னும் இதில் பதிவு செய்யாமல் மருத்துவர்கள் வேலை செய்ய முடியாது. எந்த மாநிலத்தில் பதிவு செய்தாலும் இந்தியா முழுவதும் வேலை செய்யலாம். இப்பொழுது அதில்தான் சிக்கல். State Medical council பதிவு எந்த ஊரில் படிக்கிறோமோ அங்கேதான் செய்ய வேண்டும் மற்ற மாநிலத்தில் பணியாற்ற medical council நடத்தும் ஒரு தகுதி தேர்வெழுதியப் பின்னரே பணியாற்ற முடியும் என்று விதி கொண்டு வந்துள்ளனர். இது எழுப்பும் சிக்கல்கள், கேள்விகள் அதிகம். முதலாவதாக எந்த மருத்துவனும் படித்து பாஸ் செய்தப்பின்னரே  Medical councilல் பதிவு செய்ய முடியும். அதன் படி பார்த்தால் அந்த அந்த மாநில பல்கலைக்கழகங்கள் நடத்தும் தேர்வு போதாது அது அகில இந்திய சேவை செய்யும் அளவுக்கு தகுதியை தருவதில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு. அப்படியென்றால் தேவை பல்கலைக்கழகங்களும் அவற்றின் பாடமுறைகளையும் சரி செய்ய வேண்டியதே தவிர இது போன்ற சட்டங்களில்லை. இது மாநிலம் விட்டு மாநிலம் போய் படிக்கும் மருத்துவர்களையும், மற்ற மாநிலங்களில் திருமணம் செய்து செல்லும் பெண் மருத்துவர்களையும் மிகவும் பாதிக்கும். இன்னும் சொல்வதென்றால் இது நம் குடியாட்சித் தத்துவதிற்கே எதிரானது.

இந்த சட்டத்தை விட மிக கொடுமையானதும் மருத்துவர்களை அடிமைப்படுத்துவதுமான அடுத்த சட்டம் “Clinical Establishment act 2012”.  இதன்படி மருத்துவர்கள் கிளினிக் வைப்பதென்றால் அதற்கு அனுமதி பெற வேண்டும். அது மட்டுமல்லாது அந்த கிளினிக்கில் எந்த வகையான அவசர நோயாளி வந்தாலும் அவரை “Stabilize” செய்து அதன் பின்னரே மேற்சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். இந்த சட்டம் ஒரு மருத்துவர் பத்துக்கு பத்து ரூமில் வைத்து பார்க்கும் கிளினிக்களையும் உள்ளடக்குகிறது. மேலோட்டமாய் பார்த்தால் இது நல்லது போன்று தெரிந்தாலும் இது ஒரு நடைமுறை சாத்தியமில்லாத கிராம சேவைகளை பாதிக்கும் ஒன்று.

முதலில் அனுமதி பெறுவதென்பதும் அதை வருடாவருடம் புதுப்பிக்க வேண்டுமென்பதும் சாத்தியமா... அனுமதி தரும் அதிகாரியின் கையில் அளவுக்கு அதிகமான அதிகாரம் தரவே இது வழிவகை செய்யும். ஒரு வேளை அந்த அதிகாரி வேறு ஏதோ காரணத்தால் வன்மத்துடன் இருந்தால் தேவையில்லாத மன உளைச்சல்கள்தான் இதில் மிச்சம். வேலையை செய்யவே லஞ்சம வாங்கும் இந்த நாட்டில் இது போன்ற சட்டம் அதிகாரிகளுக்கு பணம் சம்பாதித்து கொடுக்கவே பயன்படும். இதனால் பாதிப்படையும் டாக்டர்களுக்கு முறையிடக் கூட சட்டம் இடம் தரவில்லை என்பது இந்த சட்டம் ஏற்றியவர்கள் டாக்டர்கள் மேல் கொண்டுள்ள வன்மைத்தையே காட்டுகிறது.

அடுத்து அவசர சிகிச்சை தருவது – எந்த மருத்துவனும் அடிப்பட்டு வரும் நோயாளியை முதல் உதவி கூட செய்யாமல் அனுப்ப போவதில்லை. அது Ethics.  ஆனால் “Stabilize” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்??? நெஞ்சுக்கூடு உடைந்து மூச்சு திணறும் நோயாளியை “Stabilize” செய்ய Ventilator போன்ற கருவிகள் வேண்டும். ஒவ்வொரு மருத்துவரும் அதை போல் கருவிகள் வாங்கி வைப்பதென்பது சாத்தியமா... எல்லா டாக்டர்களையும் ஒரே போல் பார்க்கிறது இந்த சட்டம். “Do no Harm” என்பதே மருத்துவனின் அடிப்படை பாடம். இது போன்ற அவசர சிகிச்சை தரும் தருணங்களில் என் திறமையை மீறி இந்த சிகிச்சை உள்ளதென்று தீர்மானிப்பது டாக்டர் உரிமையே தவிர சட்டத்தின் உரிமையில்லை. இதை பயன்படுத்தி தேவையில்லாத வழக்குகள் போடவே இந்த சட்டம் பயன்படும். இது நடைமுறைக்கு வந்தால் பாதிக்கப்படப் போவது எந்த பின்புலமுமில்லாத First generation Doctors தான்.

இதனால என்ன... நல்லதுதானே.. என்று நினைக்க வேண்டாம். இது போன்ற சின்ன கிளினிக்களின் மருத்துவச்சேவைகள் Government ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழியும் இந்தியா போன்ற நாட்டில் அவசியத்தேவை. ஒரு வேளை இது போன்றதொரு சட்டம் வந்தால் கிளினிக் போடுவது கூட பணம் படைத்தவர்களால் மட்டுமே முடியும். அது மேலும் பிரச்சினைகளே வளர்க்கும்.

இது மட்டுமல்லாது 3 வருட BMRC  கள்ள டாக்டர்கள் கோர்ஸ் உருவாக்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதை பற்றி பேசுவதென்றால் தனி பதிவே போடலாம். சுருக்கமாக சொல்வதென்றால் இது அரசு அனுமதி பெற்ற போலி டாக்டர்களை உருவாக்கவே இது வழிவகுக்கும்.

இறுதியாக சில கேள்விகள்:

1. டாக்டர்கள் என்ன தீண்டத்தகாதவர்களாக... அவர்களின் குரலை கேட்க கூடாது என்று செயல்படுவதின் நோக்கம் என்ன???
2. இனி பணம் படைத்தவர்கள் தான் மருத்துவம் படிக்க வேண்டுமென்று நினைக்கிறதா இந்த அரசாங்கம்...
3. கொலை குற்றவாளிகளை விட மோசமாய் அப்பீல் செய்ய கூட வழியில்லாத சட்டம் போட வேண்டிய அவசியம் என்ன...
4. இதை எதிர்க்க ஸ்டிரைக் தவிர வேறு வழி என்ன இருக்கிறது... எப்படி மருத்துவர்களின் குரலை சமுதாயம் கவனம் கொடுத்து கேட்க செய்வது...

இந்த கேள்விகளுக்கு மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பதில் சொல்லி விட்டு திட்ட முடிந்தால் திட்டுங்கள்...